26 Mar 2012

பயணக் கைதி

     மணி ஆறு. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்து கிளம்ப தயாராக இருந்தது. மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. 

     காற்றை விட வேகமானது மனம், என் மனம் இங்கே இல்லை. சென்னையை அதிலும் என் குடும்பத்தை முழுவதுமாக மையம் கொண்டிருந்தது. மனதின் வேகத்தோடு உடலும் பயணம் செய்ய முடியும் என்றால் ஆதி மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததே வீணாகியிருக்கும்.

   
 இப்படி ஏதாவது சிந்தித்து என் எண்ணத்தை திசை திருப்ப முயன்றேன் முடியவில்லை. இன்று நான் நெல்லைக்கு வந்ததே தவறு. முதலாளியிடம் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இருந்தும் எஜமானனுக்கு விசுவாசமான விசுவாசி என்பதால் மறுக்காமல் கிளம்பி விட்டேன். இப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது.

     நான் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என் பையனுக்கு ஆக்சிடென்ட் என்று மாலை மூன்று மணிக்கு போன் வந்தால் எந்த அப்பாவால் தான் பதட்டப்படாமல் இருக்க முடியும். 

     மூன்று மணிக்கே என்னால் சென்னைக்கு கிளம்பி இருக்க முடியும். ஆனால் வந்த வேலையை முடிக்க வேறு ஆள் இல்லை.  அனுபவமுள்ளவன், கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்பவன், நேர்மையானவன் மேலும் முதலாளிக்கு என்னை விட்டால் வேறு ஆள் இல்லை. 

     சிறு விசயத்திற்கு கூட அதிகமாக பயப்படும் என் மனைவி தைரியமாக எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். பதட்டப்படாமல் தைரியமாக இருங்கள். மகனை நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் கும்பிடும் தெய்வம் நம் மகனைக் காப்பாற்றும் என்றெல்லாம் என்னைத் தேற்றினாள். எனக்குத் தெரியும் அவள் எனக்கு சமாதனம் சொல்வது போல், அவளுக்கு அவளே சமாதனம் சொல்லிக் கொள்கிறாள் என்று . இருந்தும் நான் சமாதானம் ஆகவில்லை.   

     பேருந்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது கை கால்கள் நடுங்குவதை உடன் வந்தவன் கவனித்து விட்டான். " என்னன்னே உடம்பு சரி இல்லையா" என்று கேட்டும் விட்டான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று விளக்க மனமில்லை. யாருடைய பரிதாபமும் எனக்குத் தேவையில்லை. தேவை ஆறுதல். என் பிள்ளை பிழைத்து விடுவான் என்று நம்பிக்கை தரக் கூட வார்த்தைகள். உலகில் வேறு எதுவும் தேவையில்லை. 'இறைவா என் பிள்ளையைக் காப்பாற்று'.

     மணி பத்து. இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அவசர அவசரமாக எல்லாரும் சாப்பிடச் சென்றார்கள். நான் மட்டும் அவசரமாக என் மனைவிக்குப் போன் செய்தேன். நல்லது நடக்காத என்ற ஆசையை விட நல்லது மட்டுமே நடக்காத என்ற பேராசையில் இருந்தேன். 

     போன்  முழுவதுமாக அடித்து நின்றது. எடுக்க ஒருவரும் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தேன் எடுக்க வில்லை. ஒவ்வொருமுறை முயற்சிக்கும் போதும் என் மனம் வேகமாகத் துடித்தது. நான் ஒரு மடையன். என் மகனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியவன், ஆறுதலாக என் மனைவியுடன் இருக்க வேண்டியவன் நெடுந்தொலைவு பயணத்தின் பயணக் கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் என் பயத்தை ஆழம் பார்துக்கொண்டுள்ளது . மிகவும் குழம்பியிருந்தேன்.

      செல்போன் அழைப்பொலி கேட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அவசர அவசரமாக எடுத்தேன். மனைவி தான் பேசினாள்.இப்போது எதுவும் கூற முடியாது, அதிகாலைக்குள் தெரிந்துவிடும் என்றும் என்னைப் பதட்டப் படாமல் இருக்குமாறும் கூறினாள். அப்போது தான் ஒரு விசயத்தைக் கவனித்தேன். செல்போன் ரிங்டோன். செல்போன் வாங்கிய நாள் முதல் எனக்குப் பிடித்த ஒரு சாமி பாடலை வைத்திருந்தேன். இது அலுத்துவிட்டது என்று கூறிய மகன், புதிதாக வந்த பாடலை ரிங்டோனாக மாற்றியும் கொடுத்தான்.

     ஒருவேளை ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். பேருந்தில் எல்லாரும் அமர்ந்தது விட்டார்கள். கடைசி ஆறு இருக்கையில் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்த்தனர்.பேருந்தில் ஏறியது முதலே கலகலப்பாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்ததனர். அவர்களுக்கும் என் மகனின் வயது தான் இருக்க வேண்டும். என் மகன் இருந்தாலும் அந்த இடம் இப்படி கலகலப்பகத்தான் இருக்கும்.  உயிரின் அருமை யாருக்குத் தெரியுமோ இல்லையோ பெற்றோருக்குத் தெரியும்.
அதனால் தான் நடக்கக் கூடாதது நடந்து விடக்கூடாது என்ற தவிப்பிலேயே பயணித்துக் கொண்டிருந்தேன்.
  
     பேருந்தே தூங்கி வழிந்து கொண்டிருந்ததது. பேருந்தின் வேகம் மட்டும் உற்சாகமாக இருந்தது. திடிரென்று பின்பகுதியில் ஒரு சத்தம். அதிக பாரம் ஏற்றி தன் அகலத்தை இன்னும் அகலமாக்கியிருந்த இருந்த லாரியின் மீது பேருந்து உரசி விட்டது.

     பயணிகள் அனைவரும் விழித்துக் கொண்டனர். டிரைவரை திட்ட ஆரம்பித்தனர். எல்லா டிரைவருமே மோசமான டிரைவர் இல்லை. உயிரின் மதிப்பு தெரிந்த்தவர்கள் தான். ஆனால் ஒரு சில டிரைவருக்கோ எதைப் பற்றியுமே கவலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மோசமான டிரைவரிடம் சிக்கியதன் விளைவு இன்று என் மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது.

     நகரும் பேருந்தினுடன் மணித்துளிகளும் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க நானும் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். எனக்கோ என் மனைவியிடமும் மகனுடனும் பேச வேண்டும் போல் இருந்தது. இருந்தும் எந்த ஒரு  அதிர்ச்சியான தகவலையும் கேட்க நான் இன்னும் என்னைத் தயாராக்கிக்  கொள்ளவில்லை.   

     அதிகாலை ஐந்து மணி. காபி குடிப்பதற்காக பேருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தது. முதலாளிக்கு போன் செய்யலாம் என்று நினைக்கும் போதே என் செல்போன் அந்த பக்திப் பாடலைப் பாடியது. 

     போனை எடுத்தவுடன் சற்றும் எதிர்பாராத விதமாக மகனின் குரலைக் கேட்டேன். குரலைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணில் இருந்து நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனந்த அதிர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தேன். நான் அழுவதை அவன் அறிந்து கொண்டான். 

     ஆறுதலாகக் கூறினான் " அப்பா நான் நார்மலா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க எத பத்தியும் கவலை படமா,  பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா... "      

25 comments:

  1. story is nice.........starting is super but katha end agrathu ok va irukkku......ending innum nalla irunthirukalam............

    ReplyDelete
  2. @ srimathi end innum nalla na antha paiyan hospital fees kattanum nu solluringala

    ReplyDelete
  3. WOW Nice Dialouge Boss gud twist

    ReplyDelete
  4. ஐந்து நிமிடதுற்கு இதயத் துடிப்பை அதிகமாக்கிய அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  5. கதைத்துவமும் உணர்வுத்துவமும் சிறுகதையின் சிறப்பு
    எலே சூப்பர்ல...

    ReplyDelete
  6. I think u r affected by sujatha syndrome, is it????

    ReplyDelete
  7. கேட்டதை விட படிக்கையில் அருமை...

    But i have a few doubts in the story...

    கதை சொல்றவர் bus-ல் பயணம் செய்றதா தான் கதை ஓட்டம் இருக்குற மாதிரி தெரியுது, ஆனா கடைசில "நீங்க எத பத்தியும் கவலை படமா, பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா" அப்படின்னு மகன் சொல்றாரு...

    So how is this connected?

    ReplyDelete
  8. hey really superb... i didnt expect the person was a driver.. excellent lines.. making too much interest on each and every words to read... well done my frnd...

    ReplyDelete
  9. Viru Virupaana Thodakam.. Anantha Kaneer vara vaikum mudivu.. Arumaiyana Kathai.. :-)

    ReplyDelete
  10. Excellent story
    Super twist

    Congrats
    Karunaji

    ReplyDelete
  11. நல்ல twist எதிர்பார்க்கவே இல்லை.

    ReplyDelete
  12. உயிரின் அருமை யாருக்குத் தெரியுமோ இல்லையோ பெற்றோருக்குத் தெரியும்.

    ஆறுதலாகக் கூறினான் " அப்பா நான் நார்மலா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க எத பத்தியும் கவலை படமா, பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா... "

    நிம்மதி கொடுத்த வரிகள்..

    ReplyDelete
  13. சீனு ஸார்... கதையை ரசித்துப் படித்தேன். இயல்பான நடையில் சென்ற கதையின் முடிவில் வந்த Twist எதிர்பாராதது. ரசித்தேன். கதையை விமர்சிக்குமளவு நான் மேதாவி இல்லை நானே Beginner தானே... ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. பஸ்ஸின் பின்புறம் ஒரு லாரியில் இடித்ததும் அனைவரும் டிரைவரைத் திட்ட ஆரம்பித்தார்கள் என்று Third person போல ஹீரோ சொல்வது ஏன்? அவர்தானே டிரைவர்? எங்களை Mislead பண்ணவா? கோவிச்சுக்காம இதை மட்டும் விளக்குங்களேன் ப்ளீஸ்..!

    ReplyDelete
    Replies
    1. //ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. பஸ்ஸின் பின்புறம் ஒரு லாரியில் இடித்ததும் அனைவரும் டிரைவரைத் திட்ட ஆரம்பித்தார்கள் என்று Third person போல ஹீரோ சொல்வது ஏன்? //

      இந்தக் கேள்வியை என்னிடம் யாராவது கேட்கமாட்டார்களா! நானும் இதற்க்கு விளக்கம் கொடுக்க மாட்டேனா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கேள்விகேட்டதர்க்கு முதல் நன்றி.

      முதல் விஷயம் mislead செய்வதற்கு தான் இல்லை என்றால் இறுதியில் ஒளிந்திருக்கும் twist இன் தன்மை போய்விடும்.

      // டிரைவரை திட்ட ஆரம்பித்தனர். எல்லா டிரைவருமே மோசமான டிரைவர் இல்லை. உயிரின் மதிப்பு தெரிந்த்தவர்கள் தான். ஆனால் ஒரு சில டிரைவருக்கோ எதைப் பற்றியுமே கவலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மோசமான டிரைவரிடம் சிக்கியதன் விளைவு இன்று என் மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது. //

      இரண்டாவது இந்த செயல் கதையின் நாயகனையும் கதையையும் பாதிக்கக் கூடாது. அதற்காக ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு அதாவது அந்தப் பயணத்தில் இருக்கும் பிற பயணிகளின் வார்த்தைகளில் இருந்து தன் வாதங்களுக்கு வருகிறான்.

      இங்கேயே அவனை டிரைவர் என்று காட்டிவிட்டால் இந்தக் கதையை இதற்கு மேல் நான் டிரைவ் செய்ய முடியாது என்ற ஒரு விசயமே உங்கள் கேள்விக்கான மறைமுகம் இல்லாத நேரடியான பதில்

      // ஹா ஹா ஹா ... //

      மீண்டும் ஒருமுறை சிரிப்புடன் கூடிய நன்றிகள்

      Delete
    2. Oh! Now I am cleared! Thanks Seenu!

      Delete
  14. இப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது....indha story naa padikavillai endru :)

    ReplyDelete
  15. இப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது..... indha story naa padikavillai endru :)

    ReplyDelete
  16. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் சூப்பர்.. கதை சொல்ல முதலில் கற்பனையும், வாசிப்பவனை மனதுக்குள் கேள்வி கேட்க வைத்து அதற்கான விடையை கதையில் தேட வைக்கும் டெக்னிக்கும் தெரிய வேண்டும்.. உங்களுக்கு இரண்டும் வருகிறது.. தொடர்ந்து கதைகளை முயற்சி செய்யுங்கள் நண்பா :-) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அற்புதமான கதை! இறுதியில் நல்ல திருப்பமாக இருந்தது! உங்களுக்கு திரைக்கதை எழுத சிறந்த திறமை உள்ளது. எனக்கு ஒரு குறும்படம் பார்த்த அனுபவத்தை தந்தது. வாழ்த்துக்கள். நல்ல கதை! நன்றி.

    ReplyDelete
  18. பாதுகாப்பாக பயணிகளை அழைத்து செல்லும் ஓட்டுனரின் எண்ண ஓட்டம், பரிதவிப்பு தெளிவா சொல்லப்பட்டிருக்கு.

    ReplyDelete
  19. // ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். //

    எனக்கு இப்பவும் இந்த செண்டிமெண்ட் உண்டு . இந்தக்கதையில் கூட டோன் மாற்றியபின் நல்ல செய்தி வருகின்றது .... :) Nice story ...!

    ReplyDelete
  20. // ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். //

    எனக்கு இப்பவும் இந்த செண்டிமெண்ட் உண்டு . இந்தக்கதையில் கூட டோன் மாற்றியபின் நல்ல செய்தி வருகின்றது .... :) Nice story ...!

    ReplyDelete
  21. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மூன்றாம் மனிதன் சொல்வதைப் போல் சொல்லி, முடிவில் அந்த பேருந்தை ஓட்டுபவரே கதையை சொல்பவர்தான் என்பது முக்கியமான திருப்பம். பாராட்டுக்கள்.
    டீ.என்.நீலகண்டன்
    www.tnneelakantan.com

    ReplyDelete