8 Aug 2012

அக்கா கடை


யல்வெளி சூழ்ந்த அழகான கிராமத்தில் இருக்கும் கல்லூரியாக இருந்தாலும் சரி, பரபரப்பான ஜன வாகன போராட்டம் நிறைந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் கல்லூரியாக இருந்தாலும் சரி அக்கா கடையை கடக்காமல் கல்லூரி வாசலுக்குள் நுழையவே முடியாது. நான் இளநிலை படித்த கல்லூரிக்கு இரண்டு வாசல் இருபது போல், வாசலுக்கு ஒன்றாக இரண்டு அக்கா கடைகளும் உண்டு. ஒரு அக்கா கடைக்கு செல்லும் மாணவர்கள் இன்னொரு அக்கா கடைக்கு வரமாட்டார்கள் வரக்கூடாது என்பது என்னவோ எழுதப்படாத விதி. ஒரு வகுப்பில் நிச்சயம் இரு பிரிவிருக்கும், ஒரு பிரிவு செல்லும் அக்கா கடைக்கு இன்னொரு பிரிவு செல்லாது என்பது வேண்டுமானால் காரணமாய் இருக்கலாம். 

ல்லூரிக்கு தாமதமாக வரும் வேளை, வகுப்பை விட்டு வெளியேற்றப்படும் அல்லது வெளிநடப்பு செய்யப்படும் வேளைகளில் எல்லாம் ஆதரவுக்கரமும் பாதுகாப்பும் அளிப்பது இந்த அக்கா கடை மட்டுமே. கான்டீனில் ஒருநாள் மின்விசிறி வேலை செய்யவில்லை என்பதற்காக அக்கா கடைக்கு சாப்பிடச் சென்ற நாங்கள், கல்லூரிப் படிப்பு முடியும் வரையிலும் அக்கா கடைக்குத் தான் சாப்பிடச் சென்றோம். காலை பத்து மணிக்கு சாப்பிட வரும் காளைகள், எங்கள் கல்லூரி அழகிகளை எல்லாம் வழியனுப்பிவிட்டு தங்கள் வழி செல்லும் வரை அக்கா கடை என்பது இன்னுமொரு மெரீனா. 


கூரைவேய்ந்த கட்டிடம், எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும் அடுப்பு, சுவிட்ச் போட்ட ஒரே ஒரு காரணத்திற்காக சுற்றும் மின்விசிறி, கடையின் முன்னால் டீ கடை, உள்ளே ஹோட்டல், பின்னால் சிகரெட் புகைக்கும் இடம் இது தான் அக்கா கடையின் வரைபடம். சுடச் சுட கிடைக்கும் வெங்காய வடையும், அட்சயப் பாத்திரத்தில் ஊற்றப்பட்டிருக்கும் சாம்பாரும் அக்கா கடைக்கு நாங்கள் செல்வதற்கான சிறப்பம்சம் என்றால் கடைக்கு வரும் ஒவ்வொருவரின் பெயர் படிக்கும் படிப்பு என்று அவர்கள் சார்ந்த அத்தனை விசயங்களையும் நியாபகம் வைத்திருப்பது அக்காவின் சிறப்பு. அக்கா கடை எங்களால் எப்போதுமே நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கும். தினசரிகள் இறைந்து கிடக்கும். சிகரெட் புகையும் வாசமும், வடை சுடும் வாசமும் இரண்டறக் கலந்து வித்தியாசமான மனத்தைக் கொடுக்கும்.

குப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நல்ல நேரத்தில் அக்கா கடைக்குள் நுழைந்தோம். அப்போது எங்களைப் பார்த்து அக்கா கேட்ட கேள்வி "என்ன தம்பி சேது சார் கிளாசா, வெளியில அனுபிட்டாரா". 

"சேது சார் க்ளாஸ்க்குள்ள வரும் பொது தான் எங்களுக்கே அவரு கிளாஸ்ன்னு தெரியும், உங்களுக்கு எப்படிக்கா தெரிஞ்சது?"  ஆச்சரியத்தோடு கேட்டான் என் நண்பன். " இல்ல போன ஹவர்ல உங்க சீனியர்ஸ் வந்திருந்தாங்க, இப்போ நீங்க வந்த்ருகீங்க அதான் கேட்டேன்" என்றார் சிரித்துக் கொண்டே. சாப்பிடும் பொழுது குடும்ப நிகழ்சிகள், பீஸ் கட்டுவதில் ஏற்பட்ட தாமதம் இன்னும் இன்னும் என்று எதைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தாலும் பின்னொரு நாளில் மறக்காமல் அவை அனைத்தையும் அக்கறையோடு விசாரிப்பார். 


"க்கா ஒரு போண்டாக்கு ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்தி சாபிடுறான் இவன மறந்த்ராதீங்க " என்று எங்களை நாங்களே கேலி செய்து கொண்டால், "உங்களை எல்லாம் மறந்தாலும் மறந்த்ருவேன்,  ராஜ்குமார் தம்பி போண்டா வாங்காமலே ஒரு வாளி சாம்பார் ஊத்தி சாப்பிடுராறு அவர மட்டும் மறக்கவே மாட்டேன்" என்று பதிலுக்கு அவரும் கேலி செய்வார். கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாமல் திண்டாடும் வேளைகளில் அவர் கடனாக பணம் கொடுத்து பீஸ் கட்டிய மாணவர்களும் அதிகம். 


வ்வொரு முறை பட்டமளிப்பு விழாவிற்கு வரும் மாணவர்களும் பட்டம் வாங்கியவுடன் பாடம் எடுத்த வாத்தியார்களைப் பார்கிறார்களோ இல்லையோ அக்காவைப் பார்க்காமல் போவதே இல்லை. அப்போதெல்லாம் அக்கா சொல்லுவார் "என் பிள்ளையவும் இந்தக் காலேஜ்ல தான் சேர்க்கணும்" இதைக் கேட்டவுடன் " வேற எதாவது நல்ல காலேஜ்ல சேர்த்து விடுங்க, இங்கயெல்லாம் வேணாம் " என்பது தான் எங்கள் பதிலாக வரும். உடனே அவர் சொல்லுவார் "ஒவ்வொரு வருசமும் எவ்வளவு பேர் சீட் கிடைக்காம போறாங்க தெரியுமா, நல்ல காலேஜ் தம்பி" என்பார் அழுத்தமாக.       

சென்னையில் முதுநிலை படிக்க வந்த கல்லூரியோ ஆவடியில் இருந்து ஆவடிக்குள்ளேயே பத்து கி. மீ தொலைவில் ஒரு வனாந்திரத்தில் இருந்தது. இங்கே அக்கா கடைகள் எல்லாம் கிடையாது, கடைகளுக்கு அனுமதியும் கிடையாது. ஆவடி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஜூஸ் கடை தான் எங்கள் சந்திப்பிற்கான பிரதான கடை. ( வளர்ந்து வரும் சென்னையின் புறநகர் காடுகளில் கட்டபட்டிருக்கும் கல்லூரிகள் தவிர்த்து அக்கா கடை பெரும்பாலான கல்லூரிகளுக்குப் பொருந்தும்.)  

சில மாதங்களுக்கு முன்பு தென்காசி சென்றிருந்த பொழுது ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் எனது கல்லூரிக்கும் சென்றிருந்தோம், அங்கே இரு அக்கா கடைகளையும் காணவில்லை. வாட்ச்மேனிடம் கேட்டோம் கல்லூரி வற்புறுத்தலின் படி இரு கடைகளையும் எடுத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். அக்கா குடும்பம் தற்போது எங்கு உள்ளது எதுவும் அறிவதிற்கில்லை. ஆனால் அக்கா கடைகள் இல்லாத கல்லூரியோ அழகிழந்து வெறுமையாய் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.  

சில நாட்களுக்கு முன்பு என் பள்ளித் தோழன், நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்துகொண்டு அவனுக்கு தொலைபேசினேன். உன்னை எங்கே சந்திப்பது என்று கேட்ட என்னிடம் அவன் கூறிய பதில் " கம்பெனிக்கு பின்னாடி கேட் த்ரீக்கு வெளியில் ஒரு அக்கா கடை இருக்கு, நா இப்போ அங்க தான் நிக்கேன் நீ வா". இங்கும் அக்கா கடை இருப்பது புதுமையாய் இருந்தது. இரு சக்கர வாகனம் ஒன்றில் ஒரு டீ கேன் சகிதம் தன் கடையை பரப்பி இருந்தார்.  
   
ந்த இரு இடங்களில் நான் பார்த்த அக்கா கடைகளுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும் இரு ஒற்றுமைகள் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. அங்கே கல்லூரி  புகைத்துக் கொண்டிருந்ததது இங்கே கம்பனியே புகைத்துக்  கொண்டிருக்கிறது. இந்த இரு அக்கா கடையிலும்  டீ என்ற பெயரில் கிடைக்கும் வெந்நீர் சூடாகவும் இனிப்பாகவும் சில சமயங்களில் டீ போன்ற உணர்வையும் தருகிறது.  


28 comments:

  1. அருமை.... ஒவ்வொரு கல்லூரி வெளியிலும் ஒரு அக்கா கடை.

    எங்கள் கல்லூரி விதிவிலக்கு... வெளியே கடைகள் இல்லை. :( ஆனால், கல்லூரி கேண்டீனில் ஒரு ஆயா இருப்பார்கள். பாசமாகப் பேசுவார்கள். தேநீர் அட்சயப் பாத்திரத்திலிருந்து கிடைக்கும். வேறு எதுவும் கிடைக்காது.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. முதல்வராய் வந்து என்னை வாழ்த்திய உங்களுக்கும் உங்கள் அனுபவப் பகிர்விர்க்கும் மிக்க நன்றி சார்

      Delete
  2. அக்கா கடையிலும் அனுபவமா கலக்கிரியே மக்கா.. சூப்பர் நண்பா என் பாடசாலை கால நினைவுகளும் வந்து போனது..

    ReplyDelete
    Replies
    1. என்ன மக்கா பண்றது.... ஹி ஹி ஹி ஆனாலும் என்னால உன் அளவுக்கு வர முடியாது டே

      Delete
  3. நான் படிக்கும் காலத்தில் அண்ணன் கடைகள் தான்...
    எது கிடைக்கிறதோ அதை சாப்பிட வேண்டும்... (வேற வழி...?)
    நன்றி… தொடர வாழ்த்துக்கள்...(TM 3)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் அனுபவப் பகிர்விர்க்கும் நன்றி சார்... உங்கள் கருது ராஜ் கருத்துடன் ஒன்றி போனது வியப்பாய் உள்ளது

      Delete
  4. மச்சி,
    நான் படிச்ச காலேஜில் கூட இதே மாதிரி ஒரு அண்ணன் கடை இருந்தது. அக்கா இல்லை. மதியம் லஞ்ச் சாப்பிட அப்புறம் அங்க வந்து உட்கார்ந்தா, காலேஜ் முடியற வரைக்கும் அங்க தான். இப்ப அதை எல்லாம் நினைச்சாலும் சந்தோஷமா இருக்கு. திரும்பி வராத நாட்கள் அது.
    உன்னோட எழுத்து நடை ரொம்பவே நல்லா இருக்கு...ஆனந்த விகடன்ல "வட்டியும் முதலும்" அப்படின்னு ஒரு தொடர் வரும். அதுல வர எழுத்து நடை மாதிரியே இருக்கு உன்னோட ஸ்டைல்..
    மச்சி....ஒரு கருத்து, அப்ப அப்ப கொஞ்சம் பேச்சு தமிழ்லையும் சேர்த்துக மச்சி....கொஞ்சம் லோக்கலா... படிக்க இன்னும் சுவாரிசியம்மா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் விகடன் வாசகரா.. கேட்கவே மகிழ்வாய் உள்ளது .. வட்டியும் முதலும் தவறாது படித்து விடுவேன் . ராசு முருகன் அற்புதமாய் எழுதுகிறார்...

      என் எழுத்து நடையில் நீங்கள் விரும்பும் மாற்றத்தை நிச்சயம் முயல்கிறேன் நண்பா... என் மீது தாங்கள் கொண்ட அக்கறைக்கு மிக்க நன்றி

      Delete
  5. உணர்வுகளை உள்ளடக்கிய அருமையான சிறுகதை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கல்லூரியிலும் இதுபோன்ற ஒரு அக்கா கடையும் அனுபவங்களும் நிறையப் பேருக்கு இருக்கத்தான் செய்யும். மனதில் நிலைத்து நிற்கத்தான் செய்யும். பலர் தங்கள் கடந்தகால முகத்தைப் பார்க்கும கண்ணாடியாய் ஒரு பதிவு. அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரே என் அனுபவப் பகிர்வு உங்களுக்கும் நிரஞ்சனாவிற்கும் சிறுகதை போல் தோன்றியது குறிந்து மகிழ்வே...

      //பலர் தங்கள் கடந்தகால முகத்தைப் பார்க்கும கண்ணாடியாய் ஒரு பதிவு.// மிக்க நன்றி வாத்தியாரே

      Delete
  6. இது உங்கள் சொந்த அனுபவமா- சிறுகதையான்னு புரியலை. ஆனா ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்குது. அருமை.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் என் அனுபவம் தான்... வாசித்து நெகிழ்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

      Delete
  7. சுவாரஸ்யமா எழுதி கலக்கிருங்கீங்க சீனி வாழ்த்துக்கள் (TM 7)

    ReplyDelete
    Replies
    1. என் வரலாற்றுச் சுவடுகளில் இருந்து ஹி ஹி ஹி... நன்றி நண்பா

      Delete
  8. அருமையான அனுபவ பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  9. அக்க கடை எண்கள் பள்ளியின் பின்புறம்... இப்போதும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...

      //பள்ளியின் பின்புறம்... இப்போதும்...//
      கேட்கவே மகிழ்வாய் உள்ளது

      Delete
  10. படித்தவர்களில் சிலரும் அல்ல பலரும் மறந்த ஒரு விஷயத்தை சிறப்பாக தங்கள் எழுத்து நடையில் சொல்லிச்சென்ற விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமான கருத்துக்களால் மகிழ்ந்தேன் சகோதரி

      Delete
  11. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கா கடை அனுபவம் இருக்கும்...

    ReplyDelete
  12. நல்லதொரு நினைவோடை. எங்களுக்குத் தஞ்சையில் அபபடி சில கடைகள் இருந்ததுண்டு. முக்கியமாக 'மேனகா காபி பார்' ! நாங்கள் மேனகா யார்? அவளை ஏன் காபியைப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று கிண்டல் செய்வோம்!

    ReplyDelete
  13. சுகமானநினைவுகள்! இது போன்று பள்ளிக் காலத்தில் சிலகடைகள் நினைவில் நிற்கின்றன!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  14. அழகான நினைவூட்டல் அண்ணா!

    ReplyDelete
  15. அனுபவப் பகிர்வு இனிமையாக உள்ளது.
    இப்படி ஒவ்வோருவரிடமும் எத்தனை கதைகள் இருக்கும்.
    நீங்கள் கூறியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. //இந்த இரு அக்கா கடையிலும் டீ என்ற பெயரில் கிடைக்கும் வெந்நீர் சூடாகவும் இனிப்பாகவும் சில சமயங்களில் டீ போன்ற உணர்வையும் தருகிறது.//

    பார்த்து, நெஞ்சுக்குள் அவ்வப்போது ஒரு நிமிட சிந்தனையாக எல்லோருக்கும் வந்து போகும் நனவு.

    அழகான அனுபவ பகிர்வு!

    ReplyDelete
  17. அழகான பதிவு...கடைசியில் குறிப்பிட்டபடி இல்லாமால் நான் பார்த்த அக்கா அண்ணா கடை அனைத்திலும் தேனிர் சுவையாகத்தான் இருந்தது.கார்ப்பரேட் கல்லூரிகளின் ஆதிக்கத்தில் இனி அண்ணா அக்கா அங்கே சப்ளயராக இல்லை பாத்திரம் கழுபவராகவோ மட்டுமே வாழ முடியும்.

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு. கல்லூரிக்கால வாழ்க்கைக்கு என்னை அழைத்துச்சென்றது. அடுத்த முறையாவது நம் SPK கல்லூரி ALUMNI மீட்டிங் வாருங்கள். அதற்குமுன், vijayreals@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete