13 Sept 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி


யணங்கள் வாழ்கையில் திடிரென்று ஏற்படும் வெற்றிடதையோ அல்லது வெற்றிடம் போன்ற தோற்றத்தையோ உடைக்கவல்ல சிறந்த கருவி. எனது ஆசை உலகத்தை சுற்ற வேண்டும் என்பதில் இல்லை  தமிழகத்தை  சுற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு இடம் விடாமல் சுற்ற வேண்டும். அதன் பின் நேரமிருந்தால் இந்தியாவை சுற்ற வேண்டும். ஆம் இந்த நாடோடி பயணங்களின் அடிமை. நான் ராமேஸ்வரம் சென்று வந்த கதையைத் தான் இங்கு பகிரலாம் என்றுள்ளேன். இந்தப் பயணக் கட்டுரை சற்றே உபயோகமானதாய் இருக்க வேண்டும் என்பதற்காக என் அனுபவங்களுடன் சில முக்கியமான விசயங்களையும் சேர்த்துள்ளேன். பின்னலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்றால் நிச்சயமாய் உங்களுக்கு உதவியாய் இருக்கும். சற்றே பெரிய பதிவு. நேரமிருந்தால் என் அனுபவங்களைப் படியுங்கள். இல்லையேல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய தகவல்களை மட்டும் அறிந்து கொள்ள நீல நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை படியுங்கள். 

சென்னை டூ ராமேஸ்வரம் அதிவேக விரைவு வண்டி புறப்படும் நேரமிது. 

ரே ஒரு நாள் பயணம் காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் எவ்வளவு ஊர் சுற்ற முடியுமோ சுற்ற வேண்டும். மீண்டும் மாலை ஐந்து மணி வண்டி பிடித்து சென்னை திரும்ப வேண்டும். அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் ராமேஸ்வரம் கடலில் குளிப்பது, கோவிலன் உள்ளே இருக்கும் இருபத்தி இரண்டு தீர்த்தங்களில் நீராடல் பின்பு சாமி தரிசனம், தனுஷ்கோடி பயணம் அதன் பின் நேரம் இருந்தால் வேறு ஏதேனும் அருகாமை இடங்களை சுத்தி பார்க்கலாம் என்று தான் திட்டம் தீட்டி இருந்தோம். இதில் எங்காவது ஒரு இடத்தில சறுக்கல் ஏற்பட்டாலும், மொத்த பயணமும் வீணாகிவிடும். பயணம் ஆரம்பித்த முதல் நொடியில் இருந்து இது தான் எங்களின் பெரும் கவலையாக இருந்தது. இருந்தும் ராமேஸ்வரம் மண்ணின் மைந்தன் எனது நண்பன் சுந்தர் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதால் சிறிது மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

திகாலை நான்கு மணியளவில் பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் பொழுது மனதிற்குள் இனம் புரியா மகிழ்ச்சி. ராமேஸ்வரம் என்னும் தீவுக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்ற இன்பமே அலாதியாய் இருந்தது. நிச்சயமாய்   ராமேஸ்வரம் ஒரு ஆழி சூழ் உலகு. ஞாயிற்றுக் கிழமை ஆதலால் மிக அதிகமான கூட்டம். வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமேஸ்வரம் எங்களை வரவேற்றதும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்துடன் தான். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளட்பாரம் அமைக்க தோண்டும் பொழுது கண்டெடுத்த தட்சிணாமூர்த்தி சிலையை ரயில் நிலையத்தின் உள்ளே வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் ரயில் ஏறும் போதே ஒரு விஷயத்தை கவனித்து இருந்தேன், அது ராமேஸ்வரத்தில் உறுதியானது. ராமேஸ்வரம் முழுவதுமே வட இந்தியர்களை அதிகமாகக் காண முடிந்தது. காசிக்குச் சென்றால் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று கூற கேள்விபட்டிருக்கிறேன். மேலும் வட இந்தியர்களுக்கான தென்னாட்டுத் தலங்களில் ராமேஸ்வரம் மிக முக்கியமான தலம்.   

சுந்தரின் வீட்டைப் பற்றிக் குறிபிட்டே ஆக வேண்டும். கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் புராதனமான வீடு. வீட்டின் பின்வாசலில் தொட்டு விடும் தூரத்தில் இருந்து விரிகிறது வங்காள விரிகுடா. எங்கள் பயண அட்டவணை மாற்றப்பட்டதும் இங்கு தான். கடல் மற்றும் தீர்த்தங்களில் குளித்தபின் நேராக தனுஷ்கோடி செல்வோம், மாலை மூன்று மணி அளவில் கோவிலில் கூட்டம் குறைவாக இருக்கும், அந்நேரம் சாமி தரிசனத்திற்கு செல்வோம் என்று பயணத் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து கொடுத்தார்கள் சுந்தர் அம்மாவும் உறவினர்களும் ( டிப்ஸ் :இது அருமையான யோசனை கவனித்துக் கொள்ளுங்கள்). எங்களுக்கு இந்தத் திட்டத்தில் அவ்வளவு உடன்பாடு இல்லை. ஆனால் தீர்த்தங்களில் குளிக்கச் செல்லும் போது பார்த்த கூட்டத்தை வைத்து, இதை விட வேறு நல்ல திட்டம் ஏதும் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தோம். 

மைதியான ஆற்பரிக்காத பெண் கடல். கடல் என்று சொல்வதை விட அக்னி தீர்த்தம் என்பது தான் மிகச் சரியான பெயர். இங்கே பல விதமான சம்பிரதாயங்கள் செய்யப்படுகின்றன. நேர்த்திக் கடன்கள் தீர்க்கப்படுகின்றன. இங்கு குளிக்கும்பொழுது கடலில் குளிப்பது போன்ற உணர்வு நிச்சயமாய் இல்லை. பாபநாசம் ஆற்றில் குளிப்பது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது. காமெரா கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை மற்றும் போட்டோ எடுப்பது சற்று சிரமம் என்பதால், அங்கு சுற்றி திரியும் போட்டோகிராபர் ஒருவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். (விலை ருபாய் ஐம்பது). கடலின் ஆரம்பம் சற்றே அழுக்கை இருப்பது போல் தோன்றினாலும் தைரியமாய் உள்ளே இறங்கி குளிக்கலாம் ஜாக்கிரதையாக. 



கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.  நண்பன் சுந்தருடன் சென்றதால் ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிக் கொண்டே வந்தான். ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த  தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும். 

தீர்த்தங்களில் நீராட கட்டணம் ருபாய் இருபத்தி ஐந்து. நுழைவுச் சீட்டு வாங்குவதற்கே பயங்கர கூட்டம். இந்தக் கூட்டத்தில் அகப்பட்டு இருந்தோம் என்றால் நிச்சயமாக கிணறுகளில் மட்டுமே நீராடியிருப்போம். எங்கள் மொத்த திட்டமும் அம்பேல் ஆகியிருக்கும். சுந்தரின் அம்மா எங்களுக்கு துணைக்கு வந்திருந்தார்கள். உள்ளூர், கோவிலின் மிக அருகிலயே வீடு என்பதால் கிணறுகளில் நீர் எடுத்து ஊற்றுபவர் மூலம் எளிதாக டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம். நிற்க பிளக்கில் டிக்கெட் விலை ரூபாய் நூறு. தெரிந்தவர்கள் மூலம் சென்றதால் எங்களிடம் எழுபத்தி ஐந்து ருபாய் மட்டுமே வாங்கினார்கள். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை இது தான் கிணறுகளில் நீர் இறைத்து ஊற்றுபவர்கள் யூனிபோர்ம். நீங்கள் செல்லாவிட்டாலும் அவர்களே வளைய வளைய வந்து கேட்பார்கள். இவர்கள் மூலம் சென்றால் அணைத்து கிணறுகளிலும் தண்ணீர் தெளிக்கபடுவதில் இருந்து தப்பித்து, ஒரு வாளி தண்ணீர் நம்மீது ஊற்றப்படுவதற்கான பாக்கியம் பெறுவோம்    

தீர்த்தங்களின் பெயர்கள் 

  1. மகாலட்சுமி தீர்த்தம் 
  2. சாவித்திரி தீர்த்தம் 
  3. காயத்ரி தீர்த்தம் 
  4. சரஸ்வதி தீர்த்தம் 
  5. சங்கு தீர்த்தம் 
  6. சக்கர தீர்த்தம் 
  7. சேதுமாதவ தீர்த்தம் 
  8. நள தீர்த்தம் 
  9. நீல தீர்த்தம் 
  10. கவய தீர்த்தம் 
  11. கவாச்ச தீர்த்தம் 
  12. கந்தமாதன தீர்த்தம் 
  13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் 
  14. சர்வ தீர்த்தம் 
  15. சிவா தீர்த்தம் 
  16. சத்யமிர்த்த தீர்த்தம் 
  17. சந்திர தீர்த்தம் 
  18. சூரிய தீர்த்தம் 
  19. கங்கா தீர்த்தம் 
  20. யமுனா தீர்த்தம் 
  21. கயா தீர்த்தம் 
வறட்சியின் தாக்கம் தீர்த்தங்களையும் விட்டு வைக்கவில்லை. மழை இல்லாததால், கிணறுகளில் நீர் மிகக் குறைவாகவே ஊருகிறது. சில கிணறுகளில் மிக மிகக் குறைவாகவே நீர் உள்ளது. அங்கெல்லாம் வாளியில் தண்ணீர் மொண்டு நம் தலை மீது தெளித்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமான கூட்டம். இருந்தும் தெளித்து விடுவதால் ஒரு சொட்டு நீராவது எங்கள் மீது பட்டு பாக்கியவான்கள் ஆனோம். வார நாட்களில் கூட்டம் மிக மிக குறைவாகவே இருக்கும். தீர்த்தங்களில் நீராடி முடிபதற்கு மட்டும் மூன்று மணி நேரதிருக்கும் மேல் ஆனது.கோவிலுக்கு எதிரில் இருக்கும் வசந்த பவனில் காலை உணவை முடித்தோம். காலை டிபன் மிக அருமையாக இருந்தது. விலையும் குறைவு தான். 

எங்களுடைய அடுத்த பயணம் தனுஷ்கோடி நோக்கி ஆரம்பமானது. வேன் அல்லது ஜீப் மூலம் மட்டுமே செல்ல முடியும். வேனில் பதினைந்து பேருக்கு மேல் ஏற்ற மாட்டார்கள். தனுஷ்கோடி சென்று திரும்ப வேனுக்கு ஆகிய தொகை ஆயிரத்து எழுநூறு. ஜீப் பற்றி தெரியவில்லை. 

தனுஷ்கோடி ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். அவ்வளவு அழகு அவ்வளவு அருமை. வேனில் செல்லும் பொழுது அருகில் இருந்த நபர்களுடன் பேசவில்லை சுற்றி இருந்த இடங்களையே பார்த்துக் கொண்டு சென்றோம். சென்னையின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பக்கம் விரியும் கடலை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்கும். தனுஷ்கோடி செல்லும் பாதையில் நம் இரு பக்கமும் கடல் விரிகிறது. ஒரு பக்கம் வங்காள விரிகுடா இன்னொரு பக்கம் இந்தியப் பெருங்கடல். இங்கே இன்னும் ஒரு ஆச்சரியம் நிறைந்த இறைவனின் படைப்பை எண்ணி வியக்கலாம். அதனை இன்னும் ஒரு சில வரிகளில் சொல்கிறேன். 

மிக மிக வெண்மையான பட்டு போன்ற மணல். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சாலை, அதன் பின்னான பயணங்கள் அனைத்துமே கடல் மணலில் தான், வாகனம் மணலில் எங்காவது சிக்கிக் கொண்டால் நம் கதி என்னவென்பது ? குறி தான். விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுல்லாப் பயணிகளை காண முடிந்தது. சுற்றுல்லாப் பயணிகளின் எண்ணிக்கை எங்களையும் சேர்ந்து முப்பதைத் தண்டி இருக்கும். இதில் நாங்கள் மட்டுமே பதினைந்து பேர் என்பதை கவனத்தில் கொள்க.

வேன்களும் ஜீப்புகளும் வந்து சென்ற வண்ணமாகத் தான் இருந்தன. ஆனாலும் யாரும் பதினைத்து நிமிடத்திற்கு மேல் அங்கு இருக்கவில்லை. நாங்கள் மட்டும் தான் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கே ஆட்டம் போட்டு கொண்டிருந்தோம் என்று நினைக்கிறன். நேரம் அனுமதிக்காததால் மட்டுமே அங்கிருந்து கிளம்பினோம்.

கடல் நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற விருந்து. தனுஷ்கோடியின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல். இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும் காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

தனுஷ்கோடியில் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதை அங்கிருக்கும் குடிசைகள் குறிப்பிடுகின்றன. புயலால் அழிந்த இடங்கள் யாவும் இன்று அழிவின் சின்னங்கள் இல்லை அழியாச் சின்னங்கள். அவைகளின் அருகில் சென்று பார்க்க நேரம் இல்லை. தூரத்தில் இருந்தே பார்த்தோம். அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது நிச்சயம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் திரும்பும் வழியில் இந்தியப் பெருங்கடல் அவ்வளவு அழகாய் தோன்றவே, வேனை நிறுத்தி அங்கும் ஒரு பத்து நிமிடம் ஆட்டம் போட்டுவிட்டே திரும்பினோம்.   

தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் இருக்கிறது கோதண்டராமர் கோவில். ராமன் விபீஷணனுக்கு இங்கு தான் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தக் கோவிலை கடல் சூழ்ந்து இருந்ததாகவும், இப்போது பல மீட்டர்கள் பின் சென்று விட்டதாகவும் சுந்தர் கூறினான். மதிய உணவு ராமேஸ்வரத்தில் ஆரிய பவனில் சாப்பிட்டோம். மிக மிக அருமையான உணவு. விலையும் குறைவு. அன்லிமிடெட் மீல்ஸ் என்பதை கவனத்தில் கொள்க.     

இரண்டு மணிக்கெல்லாம் மதிய உணவை முடித்து விடவே அடுத்து நாங்கள் சென்ற இடம் ராமர் பாதம். ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மணல் திட்டு தெரிந்தது. இலங்கையா என்று கேட்டோம் மன்னார் வளைகுடா என்று பல்பு குடுத்தான் நண்பன். ராமேஸ்வரம் தீவை முழுமையாக இங்கிருந்து காணலாம். செல்லத் தவறாதீர்கள். அதன் பின் நாங்கள் சென்ற இடம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.

ராமநாதசுவாமி கோவில். சீதை செய்த மணலால் செய்த லிங்கம். ராமனால் வழிபடப்பட்ட லிங்கம், அனுமன் வாலை அறுத்த லிங்கம் அகஸ்தியரால் போற்றப்பட்ட லிங்கம் என்று இந்த லிங்கத்திற்கு பல சிறப்புக்கள் உள்ளன. மாலையில் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. திருப்தியான சாமி தரிசனம். ராமநாத சுவாமி கோவில் வரலாறு எழுதினால் பதிவு இன்னும் பல பக்கங்களுக்கு நீளும் அபாயம் உள்ளது. அதனால் ஒரு சிறு தகவல், சீதை செய்த சிவ லிங்கத்தை தன் வாலால் அகற்ற முயன்ற அனுமனின் வால் துண்டாகிப் போனது. அந்த வால் விழுந்த இடம் அனுமன் குண்டம். அவர் வாலில் இருந்த ரத்தம் பட்டதால் அங்கிருக்கும் மண் சிவப்பாக இருக்கும் என்னும் கதையை நண்பன் கூறினான். இந்த ஒரு இடத்திற்கு தான் எங்களால் செல்ல முடியவில்லை.

சரியான நேரத்திற்கு எல்லா இடங்களையும் சுற்றிவிட்டு, மிகச் சரியான நேரத்திற்குப் சிங்காரச் சென்னைக்குப் புறப்பட்ட ரயிலையும் பிடித்துவிட்டோம். அதிகாலையில் ரசிக்க முடியாத பாம்பன் பாலப் பயணத்தை மாலை நேரம் அணு அணுவாக ரசித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கி மீ பயணம் அது. மண்டபம் கேம் என்னும் இடத்தில தான் அகதிகள் முகாம் உள்ளது. கூரை வேய்ந்த வீடுகள் தாயகத்தை இழந்து தவிக்கும் மனிதர்கள். அந்த இடத்தை நாங்கள் கடந்த பிறகும் வெகு நேரம் அவர்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டு வந்தோம்.   

எனது சகோதரர்கள், பள்ளி மற்றும் இளநிலை முதுநிலை கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும் சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றியதால் என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான மறக்க முடியாத பயணம். மொத்தம் பதினைந்து பேர் சேர்ந்து சென்றோம். என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்கும் நண்பர்களுக்கான பதிலை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்த்த சில பிரச்சனைகள் எழுந்த போதும் ஒரே ஒரு செல்லச் சண்டை தவிர்த்து இனிமையான அனுபவமாக அமைந்த பயணம் இது. என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும் என்னை மட்டுமே அறிந்தவர்கள். இருந்தும்  என் நண்பர்கள் அனைவரும் தங்களுக்குள் நெடுநாள் நட்பு போல பழகியது, நிச்சயம் எங்கள் நட்பிற்கு கிடைத்த வெற்றி. நட்பால் நட்பில் மட்டுமே இது சாத்தியம். என்நிலை அறிந்து தன்நிலை புரிந்து நடந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்

"ஆண்டவரே கோட்டான கோட்டி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோட்டி நன்றிகள்".


ராமேஸ்வரம் சென்று வந்த மறுநாளே இந்தப் பதிவை எழுதத் தொடங்கி விட்டேன். இருந்தும் எழுதும் மனநிலையும் சூழ்நிலையும் வாய்க்காததால் இன்றுதான் எழுத முடிந்தது. பதிவு அனுமார் வாளின் நீளத்தை விட கொஞ்சம் குறைவு என்று நினைக்கிறன். இரண்டு பகுதிகளாக எழுதி இருக்கலாம். இரண்டாவது பகுதி எழுதுவதற்குள் ஒருவேளை என் மனநிலை மாறிவிட்டால் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லாமல் விட்டுவிடும் அபாயம் உள்ளது. அதனால் தான் இந்த விபரீத முயற்சி.  

உங்கள் மனத்தில் தோன்றிய கருத்துக்களை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.  

40 comments:

  1. Seenu,muthl vada...duty...veetil poi comment eluthuren.

    ReplyDelete
    Replies
    1. நல்லா சாபிடுங்கன்னே உங்களுக்கு தான்

      Delete
  2. ராமேஸ்வரம் போனதில்லையே என்று ஏங்க வைக்கும் பதிவு. அழகாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் .. ஒருமுறை நிச்சயம் சென்று வாருங்கள்

      Delete
  3. தம்பியோ சீனு,பயணக்கட்டுரையா தகவல் கட்டுரையா?டூ இன் ஒன்...புதுசா இருக்கு.எனது அம்மாவின் ஆசை தாஜ் மகால்..காட்டி கொடுத்துவிட்டேன்.தந்தையின் ஆசை ராமேஸ்வரம்...உனது தகவலோடு அது எளிதாக முடியும்....நாடோடி இன்னும் தன் வேகத்தைக் கூட்டி விவேகத்தோடு எங்களை அழைத்து செல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. // வேகத்தைக் கூட்டி விவேகத்தோடு// ஹா ஹா ஹா இருக்கும் பிழைகளை நிச்சயம் சரி செய்கிறேன் அண்ணா... தவறுகளை சுட்டி காட்டுங்கள் ...திருத்திக் கொள்ள வசதியாய் இருக்கும்

      Delete
  4. பதிவு முழுமையாக, அனைத்து விவரங்களையும் கூறுகிறது. நல்ல வழிகாட்டி.

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை வழிகாட்டி என்று கூறியதற்கு மிக்க நன்றி அய்யா

      Delete
  5. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மனதில் தோன்றும் உணர்வுகளோடு உடனே மொத்தமாக எழுதிச் சேர்த்து, டிராஃப்டில் சேர்த்து வைத்துக் கூட இரண்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிடலாம். ஆனாலும் இதை முழுமையாகப் படிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை. நாங்களும் உங்களுடன் (மீண்டும்) பயணப்பட்டு வந்தோம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. இரண்டு பதிவாக பிரிப்பதில் சில சிக்கல் இருந்தது... தொடர்ச்சி குறையும்...
      // ஆனாலும் இதை முழுமையாகப் படிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை. நாங்களும் உங்களுடன் (மீண்டும்) பயணப்பட்டு வந்தோம்!/

      உற்சாகமான உங்கள் கருத்துகளுக்கு நன்றி சார்

      Delete
  6. அழகான எழுத்து நடையில் சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பதிவு...(2 )

    // இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். //

    ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்..சுவாரசியம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

      Delete
  7. super... romba nalla irunthchu... never feel like missing the rameswaram trip.....

    ReplyDelete
  8. super.... nice...never feel like missing the rameswaram trip... well written

    ReplyDelete
  9. தல,
    அருமையான பயண கட்டுரை...செமயா எழுதி இருக்கீங்க...நானே ராமேஸ்வரம் போய் வந்த மாதிரி இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல.. ஒரு நாள் கண்டிப்பா போயிட்டு வாங்க

      Delete
  10. மிக மிக அருமையான கட்டுரை........

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. நான் சென்று ரசித்த இட்ங்களில் ராமேஸ்வரமும் ஒன்று, அங்கே என் உறவினர் வீடு இருக்கின்ற காரணத்தால் இரண்டு நாட்கள் தங்கி ஆற அமர ரசித்து வந்தேன். ஒரே நாள் பயணமாக இருந்தாலும் முக்கியமானவை எதையும் விட்டுவிடாமல் பார்த்திருக்கிறாய் சீனு. அந்த ரஸமான அனுபவத்தை குழப்பமில்லாத தெளிவான எழுத்து நடையில் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாய். இதற்காகவேனும் பயண அனுபவங்கள் அடிக்கடி உனக்கு வாய்க்கட்டுமென்று மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமூட்டும் உங்கள் கருதுகல்லுக்க் மிக்க நன்றி வாத்தியாரே

      //அந்த ரஸமான அனுபவத்தை குழப்பமில்லாத தெளிவான எழுத்து நடையில் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாய். இதற்காகவேனும் பயண அனுபவங்கள் அடிக்கடி உனக்கு வாய்க்கட்டுமென்று மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.//

      உங்கள் வாக்கு பலிக்கட்டும்...நானும் அதையே விரும்புகிறேன்

      Delete
  12. விரிவான பயணக்கட்டுரை! அருமை! தகவல்கள் களஞ்சியமாக இருந்தது!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தலைவா..அங்கும் வருகிறேன்

      Delete
  13. யய்யா சீனு மிக தெளிவாக எழுதி இருக்கீங்க .
    நான் திட்டமிட்டு கொண்டிருக்கும் இடங்களில் முதலிடம் அதுதான் ..
    சென்று வரணும் ... எனக்கு இருந்த சில சந்தேகங்கள் கலைந்தது இந்த பதிவின் வாயிலாக ..

    அதற்கும், பகிர்விற்கும் நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் தீர்ந்ததா..நிச்சயம் நேரில் சென்று வாருங்கள்..மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும்

      Delete
  14. //இரண்டு பகுதிகளாக எழுதி இருக்கலாம். இரண்டாவது பகுதி எழுதுவதற்குள் ஒருவேளை என் மனநிலை மாறிவிட்டால் //

    எழுதுறது சரி வெளியிடும் போது ரெண்டாக வெளியிட்டு இருக்கலாமே..
    எப்பூடி?
    அதான் பெரிய மனுசங்க கிட்ட அறிவுரை கேட்கணும் என்கிறது..

    மற்ற படி கலக்கல் பதிவு மச்சி.. நான் ரெண்டு பகுதியாக தான் வாசித்தேன்.. தகவல்களும் சேர்த்து இருப்பது கூடுதல் ரசனை தந்தது..

    பின் குறிப்பு - மேலே குறிப்பிடப்படும் பெரிய மனுஷன் என்பது நான் என்பதை தாழ்மையுடன் கூறிகொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //எழுதுறது சரி வெளியிடும் போது ரெண்டாக வெளியிட்டு இருக்கலாமே..
      எப்பூடி?// அய்யா பெரிய மனுசனே தொடர்ச்சி கிடைக்காது... ஏன் எழுத்து அப்படி..நிச்சயம் அது ஒரு குறையாய் இருந்திர்க்கும்... தொடர் கட்டுரை கதை எழுத நான் என்ன ஹாரியா

      //மற்ற படி கலக்கல் பதிவு மச்சி.. நான் ரெண்டு பகுதியாக தான் வாசித்தேன்.. தகவல்களும் சேர்த்து இருப்பது கூடுதல் ரசனை தந்தது../

      நன்றி பெரிய மனுஷன் அவர்களே..

      Delete
  15. பதிவுக்கு போடணும் என்கிறதுக்காகவே போட்டோல விரைப்பா போஸ் கொடுக்கிறத பாரு

    ReplyDelete
    Replies
    1. //பதிவுக்கு போடணும் என்கிறதுக்காகவே போட்டோல விரைப்பா போஸ் கொடுக்கிறத பாரு// யோவ் போய்யா...

      Delete
  16. நான் கடந்த முறை லீவில் இந்தியா வந்திருந்த போதுதான் முதன் முறையாக எனக்கு ராமேஸ்வரம் திருத்தலத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது! அன்று கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினாலும் தீர்த்த நீராடளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டமையாலும் நிறைய இடங்களை பார்க்க முடியாமல போனது!

    அடுத்த முறையாவது அனைத்து இடங்களையும் தவறாது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த முறையாவது அனைத்து இடங்களையும் தவறாது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!// நிச்சயம் சென்று வாருங்கள் வரலாறே... உங்கள் வரலாறுகளில் பதியப்பட வேண்டிய விஷயம் நிறைய கிடைக்கும் இங்கே

      Delete
  17. சிறு வயதில் சென்ற இடம்... அப்போது ஒன்றும் புரியவில்லை. இப்போது உங்கள் பதிவினைப் படித்த பிறகு மீண்டும் செல்லத்துடிக்கிறது மனம்... அழைப்பு வரக் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. அழைப்பு சீக்கிரம் வரும் சார்.. தவறாது செல்லுங்கள்

      Delete
  18. புதிதாக செல்பவர்களுக்கு மிகவும் உதவும்...

    (KR ஐயாவிடம் பேசியிருக்கலாமே...)

    ReplyDelete
    Replies
    1. சார் அதன் பின் பேச முடியாமல் போய் விட்டது .. இருந்து வேறு ஒரு சந்தர்பத்தில் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.. தங்கள் அக்கறைக்கு நன்றி சார்

      Delete
  19. Next time my visit Rameshwaram too added now.. Superb explanation abt Rameshwaram...

    ReplyDelete
  20. நல்ல அனுபவப் பகிர்வு உங்கள் எழுத்தில் படிக்கும் போது இன்னும் சுவாரஷ்யமாக இருக்கிறது....
    என்ன பதிவுதான் கொஞ்சம் தூக்கலா இருக்கு சமாளிச்சிட்டோமில்ல

    ReplyDelete
  21. நான் பிறந்த ஊர் இது என்பது நான் பெறுமையாக சொல்ல வேண்டிய விசயம்,இன்னும் பார்க்க சில இடங்கள் மிச்சம் உள்ள அண்ணா,எங்கள் ஊரை சுற்றி பார்க்க ஒரு நாள் பயணம் போதாது....!!
    கட்டுரை அருமை அண்ணா,இது போல் நான் என் ஊர் பற்றி எழுதவில்லையே என்று பொறாமையாக உள்ளது,
    இணைய இணைப்பில் பிரச்சனை உள்ளது ஆகவே தான் பதிலிடுவதில் தாமதம்.கட்டுரையை நான் முன்பே படித்து விட்டேன்.
    முடிந்தால் என்னை அலைபேசியில் அழைக்கவும்: 7708526620,

    ReplyDelete
  22. நான் பிறந்த ஊர் இது என்பது நான் பெறுமையாக சொல்ல வேண்டிய விசயம்,இன்னும் பார்க்க சில இடங்கள் மிச்சம் உள்ள அண்ணா,எங்கள் ஊரை சுற்றி பார்க்க ஒரு நாள் பயணம் போதாது....!!
    கட்டுரை அருமை அண்ணா,இது போல் நான் என் ஊர் பற்றி எழுதவில்லையே என்று பொறாமையாக உள்ளது,
    இணைய இணைப்பில் பிரச்சனை உள்ளது ஆகவே தான் பதிலிடுவதில் தாமதம்.கட்டுரையை நான் முன்பே படித்து விட்டேன்.
    முடிந்தால் என்னை அலைபேசியில் அழைக்கவும்: 7708526620,

    ReplyDelete
  23. சரவணக்குமார்22 April 2016 at 17:20

    மிக்க நன்றி, இராமேஸ்வரம் செல்ல எண்ணயிருந்த எனக்கு எண்ணத்தை உடனடியாக நிறைவேற்ற வைத்துள்ளது உங்களது பதிப்பு. மற்றவரைப் போல் தாங்கள் சுற்றியதை சொல்லாமல் எல்லோருக்கும் வழிகாட்டிய மாறி நீங்கள் படைத்த படைப்பு பாராட்டுதலுக்குாியது. மிக்க நன்றி. ராமேஸ்வரம் சென்று வந்தபின் மீண்டும் என் நன்றியைக் கூறுவேன்

    ReplyDelete
  24. அருமையான பதிவு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

    ReplyDelete
  25. அருமையான பதிவு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

    ReplyDelete