20 Sept 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தரைத் தேடி பொதிகையில் ஒரு பயணம்


டர்ந்த காட்டுக்குள் எட்டு கி.மீ மலையேற வேண்டும். வழித்துணைக்கு வருவது ஒரு ஒத்தையடிப் பாதை மட்டுமே. அடர்ந்த காட்டிற்குள் நுழைய நுழைய ஒத்தையடிப் பாதையும் மறைந்து ஒரு கட்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப்பட்டிருப்போம். சூரியஒளி நுழைய தயங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை. மூலிகை வனம், சித்தர் காடு என்ற பெருமை தாங்கிய காடுகளுக்குள் அத்திரி மகரிஷியின் சீடரான கோரக்கரைத் தேடி நாம் செல்லும் பயணம் சற்றே வித்தியாசமாய்த் தான் இருக்கும்.

னது அண்ணனும், விகடனில் மாணவப் பத்திரிகையாளனாக இருந்த அவன் நண்பனும் ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக கோரக்கரைத் தேடிச் சென்று வந்திருந்தனர். சித்தரைத் தேடிச் செல்லும் எங்கள் பயணத்திற்கான பாதையும் இங்கு தான் போடப்பட்டது. வழக்கமான ஒரு கல்லூரி தினத்தின், வாத்தியார் இல்லாத பாடவேளையில் ரிலாக்சாக முடிவு செய்யப்பட்ட சற்றே ரிஸ்கான திட்டம். என்.எஸ்.எஸ் கேம்ப் மூலம் கோரக்கர் கோவில் இருக்கும் மலைபகுதியில் ட்ரக்கிங் சென்ற அனுபவமுள்ள மணிகுமரனும் மணிகண்டனும் வழிகாட்டுவதாகக் கூறவே பயணத்திற்கு ஆயத்தமானோம்.


ல்லூரியை கட் அடிப்பது முதல் பிளான். கோரக்கரை தேடி செல்வது இரண்டாவது பிளான். அடர்ந்த காட்டிற்குள் தனியாக செல்ல வேண்டாம் என்று சிலரும்  பாதுகாப்பு இல்லை போக வேண்டாம் என்று சிலரும் மிரட்டினார்கள். இது போன்ற உற்சாகமூட்டும் சொற்களைக் கேட்க கேட்க சித்தரைத் தேடிச் செல்வதில் இருந்த ஆர்வமும் அதிகமாகியது. முடிவு செய்த ஆறுபேரும் அடுத்த நாளே கிளம்பினோம். எங்கள் கல்லூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் இருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ளது கடனாநதி அணை. அங்கிருந்து ஒரு கி.மீ நடந்தால் மலையடிவாரத்தை அடையலாம். வித்தியாசமான பயணத்தின் ஆரம்பநொடி தொடங்கும் இடமும் இங்கு தான்.       

லையேறும் பொழுது பசித்தால் சாப்பிட தேவையான திராட்சை அல்வா மிக்சர் முறுக்கு பிஸ்கட் போன்றவற்றை கிலோ கணக்கிலும், பெப்சி மிரண்டா போன்றவற்றை லிட்டர் கணக்கிலும் வாங்கிக்கொண்டோம். தென்காசியில் இருந்து கடனாநதி செல்லும் பேருந்தல் கல்லூரி செல்வது தான் வழக்கம். அம்பையில் இருந்து வரும் நண்பர்கள் அந்த பேருந்து கல்லூரியைக் கடக்கும் பொழுது அதில் ஏறிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தமானது. கல்லூரியைக் கட் அடித்துவிட்டு துணிச்சலான கொஞ்சம் வித்தியாசமான எங்கள் முதல் பயணம் ஆரம்பம் ஆகியது. 

லையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கும் பொழுதே எங்கள் கோட்டம் ஆரம்பித்துவிட்டது. ஆனால் மலையடிவாரத்தின் ஆரம்பத்தை பார்த்தபொழுது தான் அதுவரை வெளிவரமால் இருந்த பயம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. செக்போஸ்டில் இருந்த வனக்காவலர்கள் எங்களை அழைத்து மிரட்டத் தொடங்கினார்கள். எங்கே அனுமதிக்க மறுத்து விடுவார்களோ, போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிடுமோ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தோம். புத்தகப் பையினுள் மது சிகரெட் வைத்துள்ளோமா என ஆராய்ந்தனர். நாங்கள் பரமகல்யாணி மாணவர்கள் என்று தெரிந்ததும் வனத்திற்குள் செல்ல இன்முகத்துடன் அனுமதித்தனர். காரணம் எங்கள் கல்லூரி நிறுவனருக்கு அங்கே அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டு. பிளாஸ்டிக் குப்பைகள் போட வேண்டாமென்று மட்டும் அறிவுறுத்தினர்.   

புலிகள் காப்பகம். புலிகள் கொடிய வன விலங்குகள் உள்ள வனப்பகுதி என்ற எச்சரிக்கைப் பலகை கொடூரமாக எங்களை வரவேற்றது. வனகாவலரிடம் சென்று விளக்கம் கேட்டோம். புலிகள் நடமாட்டம் குறிப்பிட்ட மாதங்களில் தான் அதிகமாக இருக்கும் என்றும் அந்த நேரங்களில் வனகாவலர்கள் ஆங்கங்கே பாதுகாப்பிற்கு இருப்பார்கள் என்றும் வயிற்றில் பாலை வார்த்தனர். ஆனால் அடுத்த நொடியே அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்கள். வனத்திற்குள் மிக அமைதியாக செல்லுங்கள். ஒருவேளை புலி எதுவும் குறுக்கிட்டால் சத்தம் இடாதீர்கள். யானை மற்றும் நரிகள் உண்டு. மனிதர்களைப் பார்த்தால் மிரண்டு தாக்கக் கூடும். அதனால் கையில் கம்பு ஒன்று வைத்துக்கொள்ளுங்கள், கூட்டமாக ஓடாதீர்கள் என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். 

எங்களை அடுத்து வரவேற்றது அதிக அழுத மின் வேலிகள் தொடாதீர்கள். இதை பார்த்த அடுத்த நொடி யாரால் தான் அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். அங்கருந்த வனகாவலரிடம் " வேறு பாதை இல்லையா, எப்படி காட்டிற்குள் செல்வது" என்று கேட்டோம். கிண்டலாக சிரித்துக் கொண்டே கூறினார், " அதுல கரண்ட் வந்தே பலகாலம் ஆகுது, சட்டை கிழியாம பார்த்து நுழைஞ்சு போங்க" . இருந்தும் ஒருவித பயத்துடனே வேலிக்குள் நுழைந்து மலையேறத் தொடங்கினோம். குற்றாலத்தின் ஆரம்ப அருவியான செண்பகாதேவிக்கும் வனத்தினுள் தான் செல்லவேண்டும். ஆனால் அது அடர்ந்த வனம் இல்லை. பகல் வேலைகளில் ஆள் நடமாட்டமும் உண்டு.  ஆனால் இங்கோ அப்படி இல்லை. ஆரம்பம் முதலே அடர்ந்த வனம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது சூரிய வெளிச்சம் ஊடுருவும். மிகவும் குளுமையான சூழ்நிலை. சில இடங்களில் பாதை இரண்டு மூன்றாகவும் பிரிந்து குழப்பத்தை உண்டு பண்ணியது. வரும் பொழுது தடம் மாறிவிடக் கூடாது என்பதற்காக வழித்தடங்களை போட்டோ பிடித்துக் கொண்டோம். 

மேற்குத்தொடர்ச்சி மலையில் அதிகம் அறியப்படாத நதி கடனா நதிதண்ணீர் வரைந்து குறையுமே தவிர வற்றாத ஜீவ நதி. கடனா அணை தயவில் விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது. பாதையில் குறுக்கிடும் கடனா நதியைத் தாண்டி தான் கோரக்கரைப் பார்க்கச் செல்ல வேண்டும். தண்ணீர் விசயத்தில் எங்களுக்கு எச்சரிக்கை ஜாஸ்தி. மேலும் எங்கள் நண்பர்கள் கூறிய முக்கியமான விஷயம் " திடீர்னு மழை பெஞ்சா வெள்ளம் அதிகமா வரும். ஆத்த கடகாதீங்க திரும்ப வந்த்ருங்க. அந்தப் பக்கம் மாட்டிகிட்டா வெள்ளம் குறையுற வரை கரையிலேயே நில்லுங்க. காட்டாறு வெள்ளம் திசையறியாது கொடூரமானது. மிக முக்கியமான இந்தக் கருத்தை மட்டும் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டோம்.

ற்றில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருந்தது. பாதம் நனையாமல் அக்கறைக்கு சென்று விடும் அளவிற்கு பாறைகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன. இருந்தும் எங்களுக்குள் ஒரு விவாதம். விவாதத்தின் இறுதியில் ஆற்றில் இறங்கி குளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அந்நேரம் பெரிய கோடாலியுடன் விறகுவெட்டி ஒருவர் வந்தார். அவரிடம் குளிப்பது பற்றி கேட்டோம். இங்கு ஆழம் இருக்காது என்றும் சற்று தள்ளி குளிப்பதற்கு ஏற்ற வகையில் ஆழம் இருக்கும் என்றும் ஒரு இடத்தைக் காட்டினார். அங்கு சென்று குளிபதர்க்கு நாங்கள் தயங்கவே, அவரும் எங்களுடன் இறங்கிக் குளிக்க வந்தார். அவர் பல வருடங்களாக இங்கு தான் விறகு வெட்டி கொண்டிருப்பதாகவும், பச்சை மரங்களை வெட்டத் தான் தடை. பட்டுப் போன காய்ந்த மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி உண்டு என்று கூறினார். பொதிகை மலை முழுவதும் மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால் ஆடு மாடு மேய்க்கத் தடை இருபதாகவும் கூறினார்.

சித்தர்கள் குறித்து கேட்டதற்கு , லேசாக சிரித்தார். காவி உடை உடுத்திய சாமியார்களை அதிகம் பார்க்கலாம் என்றும், யார் சித்தர் யார் சாமியார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சாமியார்கள் கொடுக்கும் மூலிகை மருந்துகள் சக்தி வாய்ந்தவை. அந்த செடிகளை நம்மால் இனம் காண முடியாது என்றெல்லாம் பல தகவல்களைக் கூறினார். குளித்து முடித்து நாங்கள் கிளம்பும் வரை பொறுமையாக  எங்களுக்குக் காத்துக்கொண்டிருந்த அவர் சிறிது தூரம் எங்களுடனே வந்தார். ஒரு இடத்தில ஒரே போன்ற அமைப்புள்ள பாதை இரண்டாகப் பிரிந்தது. சரியான பாதையை அடையாளம் காட்டி தான் பாதையில் அவரும் எங்கள் பாதையில் நாங்களும் பிரிந்து நடக்கத் தொடங்கினோம். ஒருவேளை அவரே சித்தராக இருப்பாரோ என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டே கோரக்கரைத் தேடி பயணித்தோம்.

கோரக்கர் அமர்ந்து தவம் செய்யும் குகையை கண்டோம். பார்பதற்கே ரம்மியமாய் இருந்தது. இன்றும் அவர் அங்கு வந்து தவம் செய்கிறார் என்பது கூடுதல் தகவல். அந்தக் குகையின் அருகில் ஒரு சிறு ஊற்று அருவி போல் செல்கிறது. அதனைப் பற்றி அடுத்து வரும் வரிகளில் கூறுகிறேன். கோவிலைத் தேடி விடைதெரியா பாதையில் ஏதோ ஒரு சந்தோசத்துடன் எதிர்பார்ப்புடன் நடக்க ஆரம்பித்தோம். கரடு முரடான மலையில் திடிரென்று ஒரு பெரிய சமதளப் பரப்பு. இங்கு தான் கோரக்கனாதர் கோவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கோவிலைச் சுற்ற ஆரம்பித்தோம் மணிகுமார் மட்டும் பயணக் களைப்பாய் இருக்கிறது, பிறகு வருகிறேன் என்று கூறினான். பின்பு வந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது ஒரு கிலோ திராட்சையையும் தனியொருவனாக தின்று தீர்த்திருந்தான் என்பது. 

(சந்தன மழை பொழியும் மரம்)

கோவிலுக்கு நாங்கள் வருமுன்பே பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டிருந்தது. தினசரி பூஜை உண்டு. வெளியூரில் இருந்து வருகிறோம் என்றால் அய்யரிடம் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்வார்க்குறிச்சியில் தான் அய்யரின் வீடு உள்ளது. அங்கு யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். உங்கள் வருகையை தெரிவித்தால் அவரே உங்களை அழைத்தும் செல்வார் என்பதை எல்லாம் பின்பு தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். 

கோரக்கர் தான் மூலவர். அவரைத் தான் சந்திக்க முடியவில்லையே தவிர, அவரின் குருக்களான அத்திரியும் அகஸ்தியரும் மரத்தடியில் தான் அமர்ந்திருந்தனர். அவர்கள் தரிசனம் எப்போதும் நமக்கு உண்டு. இங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தனமழை பொழியும் என்று கூறுகிறார்கள். அன்று எல்லா சித்தர்களும் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடுவதகவும் கூறுகிறார்கள். ஆகாயகங்கை என்பது அங்குள்ள ஊற்று, அதன் சிறப்பு கீழே உள்ள படத்தில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது. கிளிக்கி படித்துக்கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கிருந்து அந்த இடங்களை ஆராய்ந்துவிட்டு மெதுவாக கீழே இறங்கினோம். 

(ஆகாய கங்கை ஊற்று பற்றிய குறிப்பு)

திரும்பும் பொழுது வந்த வழி மறந்து பாதை மாறிவிட்டோம், எப்படி எங்கே செல்வது என்று தெரியாமல் தனித்து விடப்பட்ட நேரம் கோடைக் காலம் எங்களுக்குக் கைகொடுத்தது. கோடை வெயிலில் கடனா டாம் முக்கால்வாசி வற்றிய நிலையில் இருந்ததால் அதில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். வற்றிய அணையில் நடந்தது கூட வித்தியாசமான அனுபவமாகத் தான் இருந்தது. எங்களால் மறக்க முடியாத உற்சாகமான பயணம் அது.  

(கடனா அணை )

காடும் காடு சார்ந்த இடங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் கவலைகளை மறக்கச் செய்கிறது. மனிதன் தான் எந்த விதமான கவலையும் இன்றி காடுகளையே இல்லாமல் செய்து கொண்டுள்ளான். வாய்ப்பு கிடைத்தால் காடுகள் இருக்கும் பொழுதே அங்கெல்லாம் சென்று வந்துவிடுங்கள் இல்லையேல் கற்பனையில் தான் அவற்றைக் காண வேண்டிய நாள் வரும்.  


நாடோடி எக்ஸ்பிரஸ் குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். 


19 comments:

  1. மிகத் துணிச்சலான பயணம்!
    கடனாநதி- கேள்விப்பட்டதில்லை!
    //ஆழ்வார்க் குறிச்சியில்தான் ஐயரின் வீடு, முன்னதாக சொன்னால் அவரே அழைத்து வருவார்.... உபயோகமான தகவல்!
    சுவாரஸ்யமான பயணம்தான்...!

    ReplyDelete
  2. திகில் நிறைந்த அனுபவப் பயணம்! சுவையாக வுள்ளது!

    ReplyDelete
  3. காடும் காடு சார்ந்த இடங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் கவலைகளை மறக்கச் செய்கிறது.

    உண்மை தான் சீனு

    பயணம் அனுபவத்தை சுவாரஸ்யத்துடன் தந்திருக்கின்றீர்கள் நன்றி

    ReplyDelete
  4. கடனாநதி அணை,நானும் தம்பியும் வந்துள்ளோம். போகிறபோக்கில் பேரழகன் சூட்டிங் எடுத்த இடம்லாம் காட்டுனான்.காட்டு வழியில் இல்லை என்றாலும் மறுபடி நினைக்க வைத்து விட்டாய்.வரும் விடுமுறையில் ஒரு மீள் பயணம் போக வேண்டியதுதான்.

    ReplyDelete
  5. >>>ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருந்தது. பாதம் நனையாமல் அக்கறைக்கு சென்று விடும் அளவிற்கு பாறைகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன<<<

    காட்சியை விவரிப்பதில் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு இருக்கும் கற்பனை திறன்..தங்களுக்கும் இருப்பது வியப்பு.. keep rocking brother!

    ReplyDelete
  6. திகில் நிறைந்த உங்கள் அனுபவத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறிர்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  7. பயண அனுபவங்கள் அருமை...

    ReplyDelete
  8. சுவாரஸ்யமாக இருந்தது... கொஞ்சம் திகுலுடன்...

    ReplyDelete
  9. இளைஞர்கள் இப்படித்தான் துறுதுறுவென எதையாவது ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்! சிறப்பானதொரு அனுபவ பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  10. அழகான அனுபவப் பகிர்வு நண்பா...
    உண்மையில் எனக்குக் கூட அடர்ந்த காடுகளில் பயணிக்க கொள்ளை ஆசை விரைவில் அதுவும் நிறைவேறும் என நினைக்கிறேன்
    ஒரு சிறுகதை படித்தது போன்ற உணர்வு... அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  11. இளமை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கிறது. சுவாரசியமான கட்டுரை, படங்கள் பிரமாதம். பாதத்தை நனைக்காத ஆறுகள் தான் இப்போது தென்படுகின்றன தமிழ்நாட்டில். கிலோ திராட்சையையும் தின்ற நண்பரை அன்புடன் தட்டிக் கொடுத்தீர்களா? சுற்றுலா போவதானால் எப்படிப் போவது, எங்கே தங்குவது போன்ற விவரங்களையும் சேர்த்திருக்கலாமே?

    ReplyDelete
  12. யாருப்பா அது முதல் படத்தில காட்டுக்குள போறதா கன்பார்ம் பண்றது

    ReplyDelete
  13. இன்னும் சித்தர் சாம்ராஜ்யத்துக்கு எல்லாம் போவதாகப் ப்ளான் இருக்கா.. போய் வந்த அனுபவம் அருமை. நீங்கள் அதைப் பகிர்ந்த விதமும் அருமை.
    கடனா நதி என்று ஏன் பெயர் வைத்தார்கள்.
    எந்த நதியில் தண்ணீர் இருக்கிறது இப்போது. நீங்கள் சொல்வது போலப் போய் வரவேண்டியதுதான்,.

    ReplyDelete
  14. பயண அனுபவம் அருமை அண்ணா!

    ReplyDelete
  15. பயண அனுபவம் ஆர்வம் தூண்டுகிறது.. அருமையாய் விவரித்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  16. படங்களுடன் தகவல்கள்.. படிக்க படிக்க எப்போ போகலாம் என்கிற ஆர்வம் தருகிறது

    ReplyDelete
  17. ஆழ்வார்குறிச்சியில் உள்ள நல்வாழ்வு ஆசிரமத்திற்குச் சென்றிருந்தபோது, சித்தர் கோரக்கர் - செல்லும் வழி என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்த நினைவு பசுமையாக உள்ளது. செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தங்கள் கட்டுரை அவசியம் செல்ல வேண்டும் என்ற என்ணத்தை ஏற்படுத்துகின்றது. செண்பகாதேவி சென்று வந்த அனுபவம் உண்டு. பொதிகை மலை தமிழகத்தின் பொக்கிஷம். திடங்கொண்டு போராடு- நாடோடி எக்ஸ்பிரஸ் தலைப்புக்களும் கட்டுரைகளும் வெகு அருமை. கோரக்கர் கட்டுரையில் கொட்டம் என்று இருக்கவேண்டிய சொல் கோட்டம் என்று இருக்கிறது .

    ReplyDelete